ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன்,மருது கணேஷ், டிடிவி தினகரன் ஆகியேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்யமூர்த்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 277 அதிகாரிகள் அடங்கிய 61 குழுக்கள் அமைக்கப்பட்டன. இருந்தும் பண பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 21 வரும் தேதி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.
இவர்களை தகுதி இழப்பு செய்யவேண்டும் என பகுஜன் சமாஜ்கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த முறை 1.59 கோடி மதிப்பில் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, புடவை வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த தேர்தல் ரத்து ஆக காரணமாக இருந்த மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கவேண்டும் என மனுதாக்கல் செய்யபட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ் சிவஞானம் கே. ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதரார் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் தொடர்பாக ஏற்கனவே இந்த நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.