/indian-express-tamil/media/media_files/2025/10/16/traffic-2025-10-16-10-07-30.jpg)
வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதியம் இரண்டு மணி முதல் சென்னை மற்றும் ஆவடி செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி வழியாக கிராண்ட் வெஸ்ட் டிரங் ரோட், ஸ்ரீபெரம்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூர் வழியாக கிராண்ட் சவுத்தர்ன் டிரங் ரோடுக்கு திருப்பி விடப்படும்.
மதுரவாயில் வழியாக தாம்பரம் ஜி.எஸ்.டி ரோடு செல்லும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பிவிடப்படும். காஞ்சிபுரத்திலிருந்து வாலஜாபாத் வழியாக ஓட்டேரி செல்லும் வாகனங்கள் ஒரகடத்தில் திருப்பிவிடப்படும். இதேபோன்று 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் சாலை வழியாக வாலஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்படும். இதேபோன்று, சிங்கபெருமாள் சாலையில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரம்பத்தூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்படும்.
இரும்புலியூர் பாலத்தில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள் வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் பைபாஸ் வழியாக திருப்பி விடப்படும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை கிளம்பாக்கத்திலிருந்து தினமும் 2,092 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.