/indian-express-tamil/media/media_files/Hwyz0e2spqNTeRUqN0cd.jpg)
தீபாவளி கட்டணக் கொள்ளை: ஆம்னி பேருந்துகள் மீது புகாரளிக்க சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், பேருந்து சங்கத்தினருடன் போக்குவரத்து ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலோசனையில், விதிகளை மீறி செயல்படும் பேருந்துகள் சிறைபிடிக்கப்படும். அரசின் விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க போக்குவரத்துத் துறை சிறப்புத் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
வரும் 25-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், மக்கள் பேருந்துகளை நம்பி முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக உயர்த்தி விட்டதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாகச் சென்னையில் இருந்து ராமநாதபுரம் செல்ல பேருந்தின் வசதியைப் பொறுத்து ரூ.650 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தீபாவளி கட்டணமாக ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற ஊர்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த கட்டண கொள்ளை குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கர், "கூடுதல் கட்டணம் வசூலித்தால் பேருந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஆம்னி பேருந்து நிறுவனங்கள் உடனடியாக கட்டணத்தைக் குறைக்க வேண்டும்," என்று எச்சரித்து உள்ளார். கூடுதல் கட்டண வசூலைத் தீவிரமாகக் கண்காணிக்கப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஆணையர் சார்பில் அனைத்து சரக இணை போக்குவரத்து ஆணையாளர்கள் மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி காலகட்டமான அக்டோபர் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், சுங்கச் சாவடிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா்களை பணியமா்த்தி தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்யவும், இந்த ஆய்வின்போது உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் இல்லாதது கண்டறியப்பட்டால், அந்தப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடிகளை விரைவாக கடந்து செல்ல சுங்கச்சாவடி அலுவலா்கள் மூலம், தனி வழி அமைத்து சீரான வாகன போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான புகாா் எண்:
சென்னை(ஆணையா்)-18004255161
சென்னை(வடக்கு)இணை ஆணையா்- 9789369634
சென்னை(தெற்கு) - 9361341926
மதுரை- 9095366394
கோவை- 9384808302
விழுப்புரம்-9677398825
வேலூா்- 9840023011
சேலம்- 7845636423
ஈரோடு- 9994947830
திருச்சி-9066032343
விருதுநகா்-9025723800
திருநெல்வேலி- 9698118011
தஞ்சாவூா்- 9585020865
கூடுதல் கட்டணம் மற்றும் பேருந்துகள் தொடா்பான பிற புகாா்களுக்கு இந்த எண்களில் தொடா்பு கொள்ளலாம். அல்லது இந்த எண்களுக்கான வாட்ஸ்அப்-இல் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமும் பயணிகள் புகாரளிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.