தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து பலர் ஊருக்கு செல்கின்றனர். ஷாப்பிங், பட்டாசு, பொருட்கள் வாங்குவது என கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல
பயணிகள் மெட்ரோ ரயில்கள் மற்றும் எம்.டி.சி பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறை (ஜிசிடிபி) அறிவுறுத்தி உள்ளது.
தி.நகர், புரசைவாக்கம் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புரசைவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மட்டும் பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.ஐ.டி நகர் வழியாக தி.நகர் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி முத்துரங்கன் சாலை வழியாக உஸ்மான் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தி.நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷாப்பிங் செய்பவர்கள், சோமசுந்தரம் பூங்கா, தியாகராய சாலை, தணிகாசலம் சாலை, நாச்சியார் சாலை, மகாலட்சுமி தெரு, மோதிலால் தெருவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
பொதுமக்களுக்கு வசதியாக புரசைவாக்கத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாராயண குரு சாலையில் உள்ள மாநகராட்சி மைதானம், அழகப்பா சாலையில் உள்ள ஈவார்ட் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சாலையில் உள்ள ELM பள்ளி மைதானம் மற்றும் GE கோவில் தெரு ஆகியவை இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க நோ பார்க்கிங் பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் பைக்கில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“