தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தவிட்ட உச்சநீதிமன்றம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், தமிழகத்தில் நரகாசுரனை வதம் செய்த நாளை, தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதாகவும், இதற்கான கொண்டாட்டங்கள் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தில் வடக்கிலும், தெற்கிலும் அதிக வேறுபாடு உள்ளது என்றும், எனவே தமிழகத்தில் அதிகாலை 4.30 மணியிலிருந்து, மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால், காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.