Diwali festival Special buses announced: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை அக்டோபர்27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதனால், ஓவ்வொரு ஆண்டும் சென்னையில் தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து கிடைக்காமால் சிரமப்படுவது ஏற்பட்டுவருகிறது. இதனைத் தவிர்க்க தமிழக அரசும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த ஆண்டு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து துறை செயலர் மற்றும் போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில், கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மதுரவாயல், மாதாவரம், கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கடந்த ஆண்டு 20,500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 21,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. சென்னையில் 26 இடங்களில் பேருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது. இன்னும் ஓர் ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை ஆகிய 3 நாட்களும் ஒட்டு மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.