தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.430 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி முன்தினம், தீபாவளி அன்று என இரண்டு நாள் தீபாவளி மதுபான விற்பனை கடந்த ஆண்டை விட 38 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு 2023-ல், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் மதுபானம் விற்பனை சுமார் ரூ.468 கோடியாக இருந்தது. இந்தாண்டு ரூ.430 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் மதுவிற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.
அதன்படி, அக்.30,31 ஆகிய இரண்டு நாட்கள் மண்டல வாரியாக மது விற்பனை விவரம், சென்னையில் 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், 31ம் தேதி தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. அதேபோன்று மதுரையில் 30ம் தேதி ரூ.40.88 கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்கும், திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி, 31ம் தேதி ரூ.46.51 கோடிக்கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, 31ம் தேதி ரூ.45.18 கோடி, கோவை 30ம் தேதி ரூ.36.40 கோடி, 31ம் தேதி ரூ.42.34 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு மதுரையைவிட சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“