தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் முன்பதிவு நேற்று தொடங்கியது.
முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் மெப்சில் 2 சிறப்பு கவுண்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் பஸ் நிலையத்தில் தலா ஒரு சிறப்பு கவுண்டர்களும் என மொத்தம் 30 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. , தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்காக 21ஆயிரத்து 581 பேருந்துகளும், வெளியூரில் இருந்து சென்னை திரும்புவதற்காக 22ஆயிரத்து 587 பேருந்துகளும் இயக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தீபாவளியை பண்டிகையை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை பயனிகளிடம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணம் தொடர்பான புகார்கள் இருந்தால் 18004256151 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். போக்குவரத்துக் கழகங்களில் உள்ள புகார்கள் தெரிவிப்பதற்காக 9445014450, 9445014436 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தீபாவளிக்காக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3 நாட்களுக்கு மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் இவற்றுக்கு முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.