தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் (NSB Road) தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலைக்கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் அதிகாரிகளை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக குற்ற சம்பவங்கள் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, காவல் கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;
’திருச்சி மாநகர பகுதிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11 மணிக்கு மேல் செய்துக்கொள்ளுமாறும், தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி பகல் நேரங்களில் என்எஸ்பி சாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கனரக வாகனங்கள் இயக்கப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பை கருதி தங்கள் உடமைகளை குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம்.
அது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் தற்காலிக தகவல் உதவி மையம் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து வரப்படுகிறது.
திருச்சி மாநகரில் என்.எஸ்.பி.ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, மலைகோட்டை வாசல், மெயின்கார்டு கேட் நந்திகோவில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், பெரியகடைவீதி கரீம்ஸ்டோர் அருகில், பெரியகடை வீதி ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/H5pnnWyCnMG5EmLhlFYO.jpeg)
தெப்பக்குளம் என். எஸ். பி. ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன சுழலும் டோன் கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, மேலப்புலி வார்டுரோடு, என்.எஸ்.பி.ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் 186 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றை என். எஸ். பி. ரோடு ரகுநாத் சந்திப்பில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தரைக் கடைகள் மற்றும் நடமாடும் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி உடன் இணைந்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது பொருட்களையோ, குழந்தைகளையோ ஒப்படைக்கவேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் கூறினார்.
தற்காலிக காவல் கண்காணிப்பு மையம் திறப்பு விழாவில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, போக்குவரத்து உதவி ஆணையர் நிக்சன் பாபு மற்றும் நிவேதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“