தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள் :
வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாட உள்ளதால், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
வருகிற நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து நவம்பவர் 3, 4, 5 ஆகிய நாட்களில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருந்துகள் வீதம் 12 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இவற்றோடு, மற்ற மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் 10 ஆயிரம் பேருந்துகள் உட்பட 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வெளி ஊர் செல்லும் மக்கள் பண்டிகை நேரத்தின் போது சிரமங்களை குறைக்கும் வகையில், சென்னையிலிருந்து நான்கு மார்க்கத்திலிருந்து பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.