தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் சிறப்பு ரயில் :
வரும் செவ்வாய்கிழமை 6.11.18 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரையில் தீபாவளி கொண்டாட்டங்கள் இன்று முதலே களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலர், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட திட்டமிட்டு வருகின்றன.
இதனால் தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும், தீபாவளிக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு ரெயில்வே தீபாவளி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலை இயக்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 3 மற்றும் 5 தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4 மற்றும் 7 தேதிகளில் காலை 7.10-க்கு புறப்படுகிறது.
அதே போல், தாம்பரம் - கோவை வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் ரயில்வே துறை இந்த ஏற்பாட்டை பயணிகளுக்காக செய்து தந்துள்ளது.