தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30 அன்று சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக். 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அக்.28-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது.
தொடர்ந்து அக்.29-ம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் ரயில்களிலும் அக்டோபர் 29ம் தேதிக்கு முதல் 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டும் புக்கிங் ஆனது. அந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் நிலை வந்தது. சில ரயில்களில் காத்திருப்போர் பட்டியலே இல்லாத நிலை (ரிக்ரிட்) ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், ஏற்காடு, சேரன், நீலகிரி, மங்களூரு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நிரம்பின.
அதேபோல், கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியே திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், மும்பையில் இருந்து சேலம், நாமக்கல், வழியே செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முதல் 5 நிமிடத்தில் முடிந்தது.
இதுதவிர, சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களிலும் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலை அடைந்தது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலா் ஏமாற்றமடைந்தனா்.
தொடர்ந்து அக்.30-க்கான ரயில் முன்பதிவு இன்றும் (ஜூலை 2), தீபாவளி நாளான அக்.31-க்கான முன்பதிவு நாளையும் (ஜூலை 3) தொடங்கவுள்ளது.
பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“