தீபாவளி சிறப்பு பஸ்கள்: சென்னையில் 13 இடங்களில் முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்வதற்காக சென்னையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்வதற்காக சென்னையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Advertisment
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வருகிற நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர் செல்பவர்களுக்காக ஆண்டு தோறும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றியும் பேருந்துகள் முன்பதிவு பற்றியும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “சென்னையிலிருந்து வழக்கம் போல கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூவிருந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே வேளையில், சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் 13 முன்பதிவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இதுவரை 27,000 பேர் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்கு குறைவாக 14,757 சிறப்புப் பேருந்துகள், நவம்பர் 11, 112, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக 16,026 பேருந்துகள், நவம்பர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"