காவிரி ஆற்றில் இருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் காவிரியில் நீர் திறந்துவிட்டால் மட்டுமே குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று நேரில் வழங்கினார்.
கடிதத்தில் மு.க. ஸ்டாலின், “தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாலும் ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில் 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் நீர் திறந்து விடவில்லை.
இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு 20 நாள்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்.
எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“