திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
இவரின் மறைவுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
”திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் இன்று காலையில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து துடிதுடித்துப் போனேன்.
டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் பிஎÞசி, எம்பிபிஎÞ, டிஜிஓ ஆகிய பட்டங்களைப் பெற்று உதகை அரசினர் மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு திராவிடர் கழகத்தில் முழுநேரப் பணியாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.
அவரது வாழ்க்கைத் துணைவர் திரு டாக்டர் இரா.கௌதமன் அவர்களும் ஒரு மருத்துவர் ஆவார். அவரது மகனும் மருத்துவர், மகளும் பொறியாளர் என்பது மட்டுமல்ல இவர்கள் அனைவருமே சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட லட்சியக் குடும்பத்தினர்கள் ஆவார்கள்.
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றிய டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் 26.11.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகச்சிறந்த மருத்துவராகவும், சொற்பொழி வாளராகவும், கழகத்தின் திறமை மிக்க நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த சிறப்புமிக்க டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் திடீர் மறைவு திராவிடர் கழகத்திற்கு மிகுந்த பேரிழப்பாகும்.
கடந்த 2 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரைத்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி மோகனா வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்ட காட்சி இன்னமும் நம் நெஞ்சில் பசுமையாகக் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் அவர்களின் மரணம், அதுவும் விபத்தில் சிக்கி ஏற்பட்ட மரணம் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயரத்தை அளிக்கிறது.
அருமை சகோதரியாரை இழந்த துயரில் துடிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவர் மானமிகு டாக்டர் இரா.கௌதமன் அவர்களுக்கும் அவரது இல்லத்தவருக்கும் பெரியார் இயக்கக் குடும்பத்தின் பெருமைக்குரிய தலைவரான மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் மறைந்து நம் நெஞ்சில் நிறைந்துள்ள டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் அரும்பணிக்கு வீரவணக்கத்தையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயரம் தோய்ந்த உள்ளத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.