2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகள் எப்படி அனைத்து கட்சிகளையும் டீலில் விட்டதோ, அதே போன்றதொரு நிகழ்வை தற்போது தேமுதிக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று டிரெண்டை துவக்கி வைத்தவர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள், ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சரத்குமார், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என வரிசையாக அனைவரும் சென்றனர்.
அனைவரும் உச்சரித்த ஒரே வார்த்தை, 'உடல்நலம் விசாரிக்க வந்தோம்' என்பதே!.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக மல்லுக்கட்டியது. ஆனால், விஜயகாந்த் முன்வைத்த சீட் எண்ணிக்கையை பரிசீலித்த ஸ்டாலின், 'இது வேலைக்கு ஆகாது' என்று ஒதுங்கிக் கொள்ள, அதிமுக தொடர்ந்து விடாப்பிடியாக பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில், அதிமுகவுக்கு பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும், பாஜகவின் அழுத்தத்தால் பேச்சு நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி அதிமுக - பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த கூட்டத்திற்குள் விஜயகாந்த் உடனான தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்திருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலையாக இருந்தது. அதிமுகவிடமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதை முன்னிட்டே, சென்னையில் உள்ள ட்ரிடன்ட் ஹோட்டலில் பியூஷ் கோயல் தலைமையில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
அதன்பின் பேசிய துரைமுருகன், "திமுக கூட்டணியில் சேர விருப்பம் என சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். நான் சீட் இல்லை என்று சொல்லிவிட்டேன். தேமுதிக நிர்வாகிகளும் அதையே சொல்லித் தான் இங்கு வந்தார்கள். அவர்களிடமும் சீட் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன்" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், "மும்பையில் இருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ இறுதி முடிவு எடுக்கப்படும். பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருப்பதால், நேரமின்மை காரணமாக இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது. எங்கள் கட்சியின் பலம் என்னவென்பது எங்களுக்குத் தான் தெரியும். அதை மனதில் வைத்தே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தம் நடந்தபோது தான் துரைமுருகன் என்னிடம் பேசினார். பிரதமர் மோடி அடுத்த முறை தமிழகம் வரும் போது, விஜயகாந்த் நிச்சயம் அதில் கலந்து கொள்வார்" என்று தெரிவித்திருக்கிறார்.