மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பா.ஜ.க-வுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நேரம் எதுவும் நாங்கள் தரவில்லை என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் த.மா.கா, ஐ.ஜே.கே. புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, கூட்டணிக்கான கதவைத் திறந்து வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மற்றொருபுறம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து தேர்தலை எதிர்கொள்கிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தே.மு.தி.க எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இந்த மக்களவைத் தேர்தல் என்பதால் தே.மு.தி.க-வுக்கு இது முக்கியமான தேர்தலாக உள்ளது.
அ.தி.மு.க தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க-வை சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தே.மு.தி.க-வில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து 2 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தே.மு.தி.க முதலில் 10 மக்களவைத் தொகுதி 1 மாநிலங்களவை உறுப்பினரை எதிர்பார்த்த நிலையில், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தங்களுக்கு 3 மக்களவைத் தொகுதி 1 ராஜ்ய சபா உறுப்பினர் வேண்டும் கேட்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அ.தி.மு.க தரப்பில் 3 மக்களவைத் தொகுதிகள் மட்டும் தர முன்வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக நீண்ட நிலையில், தே.மு.திக தரப்பு மறைமுகமாக பா.ஜ.க-வுட கூட்டணி குறித்து பேசிவருவதாக செய்திகள் வெளியானது. இது அ.தி.மு.க உடனான பேச்சுவார்த்தையில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பா.ஜ.க-வுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நேரம் எதுவும் நாங்கள் தரவில்லை என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தே.மு.திக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நேரம் தரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“