வரும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதி தரும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் புதன்கிழமை (07.02.2024) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தலைவர் விஜயகாந்த் வகுத்த வழியில் பயணிப்போம்.
விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், திரை உலகினருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். விஜயகாந்திற்கு அரசு மரியாதை அளித்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
தே.மு.தி.க தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க-வுடனும், மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை. மாவட்டச் செயலாளர்கள் எண்ணம் என்ன என்பதை அறிந்துகொண்ட பிறகுதான் பேச்சுவார்த்தை தொடங்கும்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போல அதிகத் தொகுதிகளைத் தரும் கட்சியுடன்தான் கூட்டணி. பிப்ரவரி 12-ம் தேதிக்குள் தே.மு.தி.க-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
எந்தத் தொகுதி, வேட்பாளர் யார் என்பதெல்லாம் இனிமேல் ஆலோசனை செய்தே முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்கும் இடங்களைக் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையே நடத்துவோம். விஜயகாந்த் அளவுக்கு இதுவரை எந்தக் கட்சியும் தங்களது கொள்கைகளை அறிவிக்கவில்லை.
புதிய கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு தே.மு.தி.க சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“