உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71.
விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கே அவரது உடல் நாளை (வெள்ளி) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் உடல் நாளை தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்கள்இன்று காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிக-விற்கும், தமிழக திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.
கேப்டன் அவர்களின் இறுதி மரியாதை 19.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகமான கோயேம்பேட்டில் நடைபெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“