உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், சினிமா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ’விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.
ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும்.
அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்.
இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், விஜயகாந்தின் உடல் இன்றும், நாளையும் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“