Advertisment

விஜயகாந்த் இறுதி நிகழ்ச்சிக்கு முழு அரசு மரியாதை: ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Mk Stalin

DMDK chief Vijayakanth passed away

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், விஜயகாந்தின் உடல் இன்றும், நாளையும் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

விஜயகாந்த் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் உடலுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வா. வேலு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தியில், ‘அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் கருணாநிதி தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது கருணாநிதி அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கருணாநிதி அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், கருணாநிதி மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதியின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. கருணாநிதி அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த மக்கள் ஆணையிட்டால்என்ற படத்தில், கருணாநிதி எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment