/indian-express-tamil/media/media_files/wEmnOfw6b01ivPSr0tFK.jpg)
DMDK chief Vijayakanth passed away
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டவுடன் திருநாவுக்கரசர் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; ’தேமுதிக தலைவரும், புகழ் நிறைந்த தமிழ் திரைப்பட முன்னணி கதாநாயகருமான விஜயகாந்த் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டே, அரசியல் பணியை தொடரந்து ஆற்றி வந்தார். திரைத்துறையில் தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு பாதை அமைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ரசிகர்களால் கேப்டன் என அன்பாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியவர். நலிவடைந்த நடிகர்கள் நலன் கருதி பல உதவிகளைப் புரிந்தவர். பல நட்சத்திர நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தின் கடன்களையெல்லாம் கட்டி முடித்தவர்.
தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்ற உயர்நோக்குடன் தேமுதிக என கட்சியைத் தொடங்கி, 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து 29 இடங்களை வென்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிவர்.
பொது இடத்திலோ அல்லது வேறு ஏதாவது நிகழ்சிகளிலோ என்னை சந்தித்தால் கட்டி அனைத்து நலம் விசாரிக்காமல் செல்ல மாட்டார். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
சிறந்த அரசியல் தலைவர். தனக்கு எது சரி என்று படுகிறதோ அக்கருத்தை எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் பேசுபவர். துணிச்சல் நிறைந்தவர், நேர்மையானவர், நல்லவர், சிறந்த அரசியல் தலைவர். விஜயகாந்த் அவர்களின் மறைவு தேமுதகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியார் பிரேமலதாவுக்கும், அவரது மகன்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.