தே.மு.தி.க சந்தித்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 2011-க்கு பிறகு, தே.மு.தி.க சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் அனைத்திலும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைந்த பிறகு, அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இந்த மக்களவைத் தேர்தல். அதே நேரத்தில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க சந்திக்கும் முதல் தேர்தலாகவும் உள்ளது. விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று, திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க சார்பில், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லந்தம்பி போட்டியிடுகிறார். மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி போட்டியிடுகிறார்; விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க போட்டியிடும் மொத்தம் 5 தொகுதிகளில், எத்தனை இடங்களில் கடும் போட்டி கொடுக்கிறது என்ற எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
திருவள்ளூர் தனி தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பியை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில் பொன். பால கணபதி போட்டியிடுகிறார். திருவள்ளூர் தனி தொகுதியாக இருந்தாலும், இங்கே பெரும்பாலும் பட்டியல் இனத்தில் ஆதி திராவிடர்கள், மற்றும் அருந்ததியர்கள் வசிக்கக் கூடிய தொகுதி. அதனால், பட்டியல் வெளியேற்றம் குறித்து குரல் எழுப்பும் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த பொன். பால கணபதிக்கு வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் நல்லத்தம்பி ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பி இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க வேட்பாளர் பார்த்தசாரதி, தி.மு.க சார்பில் தயாநிதி மாறன், பா.ஜ.க சார்பில் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார்கள். இங்கே தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, கடலூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் சிவக்கொழுந்து, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணுபிரசாத், பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்கள். இங்கே விஷ்ணுபிரசாத் மற்றும் தங்கர்பச்சான் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அ.தி.மு.க வாக்குகள் தே.மு.தி.க-வுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, தஞ்சாவூர் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் சிவநேசன், தி.மு.க சார்பில் முரசொலி, பா.ஜ.க சார்பில் கருப்பு எம். முருகானந்தம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தே.மு.தி.க கடும் போட்டியைக் கொடுக்கும் என்றே தெரிகிறது.
அதே போல, விருதுநகர் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், பா.ஜ.க சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில், 3 முக்கிய வேட்பாளர்களும் பிரபலமான வேட்பாளர்கள் என்பதால் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று வேட்பாளர்களும் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இருப்பினும் தேர்தல் முடிவுகளே, இந்த தொகுதிகளில் எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என தெரிய வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.