தொகுதி மறுவரையீடு என்ற பெயரில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளை குறைத்தால் தமிழக அரசுடன் இணைந்து எதிராக தேமுதிக போராடும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரேமலதா விஜயகாந்த், குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
/indian-express-tamil/media/post_attachments/a1ef6794-dc9.jpg)
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அத்துடன் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றை குறைத்தாலும் தமிழ்நாட்டுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தமிழக அரசுடன் சேர்ந்து தே.மு.தி.க போராட்டம் நடத்தும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்து இப்போது கேட்காமல் என்னுடைய அடுத்த பிறந்த நாளான அடுத்த வருடம் மார்ச் 18ஆம் தேதி கேள்வி எழுப்பினால் அப்போது தெளிவான பதில் கிடைக்கும். கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது, நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தற்போது நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்பட்டு வருகிறோம்.
/indian-express-tamil/media/post_attachments/e867ee51-889.jpg)
வரும் ஏப்ரல் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களையும், பூத் கமிட்டி உறுப்பினர்களையும், கட்சியின் அனைத்து பதவிகளுக்கு நிர்வாகிகளையும் அறிவிக்க உள்ளோம்.
எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துவதற்கு தி.மு.க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அ.தி.மு.க.,வுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து அக்கட்சியின் தலைமையிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். தற்போது கூட ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அந்த கட்சியை சேர்ந்த அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இருப்பது போல தெரியவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/3d28cd3e-083.jpg)
நான்கு வருட தி.மு.க ஆட்சியில் நிறைகளும் உள்ளன குறைகளும் உள்ளன. தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பொறுத்த வரை பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளைகள், கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் பிரச்சனைகள் என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் முன்னெடுத்துள்ளோம். எனவே தமிழக அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்.
என்னுடைய பிறந்தநாள் என்றாலே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எனக்கு வாழ்த்து சொல்வது வழக்கம் தான். அந்த வகையில் தான் அவர்கள் இன்றும் வாழ்த்து கூறியுள்ளார்கள் அவர்களது வாழ்த்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.