தே.மு.தி.க 20 ஆம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் பிரபாகரன் கோவையில் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது கோவை மாநகர், மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சியின் கொடியேற்றி, பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்தோம்.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் நேற்று 14ம் தேதி பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தது சந்தோசமாக இருந்தது, மீண்டும் கேப்டன் பிறந்து வந்து இருப்பது போன்று தோன்றியது. அதன் பிறகு கோவில், சர்ச், மசூதி போன்ற இடங்களுக்கு சென்று வழிபட்டேன், கேப்டன் கூறுவது போன்று எம்மதமும் சம்மதம் என்று தே.மு.தி.க வின் கொள்கையாக உள்ளது. கட்சி தொடங்கிய நாளில் சென்று கடவுள்களை வழிபட்டது சந்தோசம். கட்சி பிரமுகரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் திருவாரூர் செல்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்திற்கு வந்து உள்ளேன். தே.மு.தி.க அடிப்படை தொண்டர்கள் இந்த கட்சியில் இன்னமும் விசுவாசத்துடன், பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது தோழமை கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து விட்டு வந்தேன், அவர் தே.மு.தி.க கட்சி நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அனைத்து பகுதிகளுக்கு சென்று பணியாற்றுங்கள் இன்னும் எழுச்சி அடையும் என்றும் கூறினார். அதற்கு இணையாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர், என்று தெரிவித்தார்.
பின்னர் ஜி.எஸ்.டி விவகாரத்தில் அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ குறித்தான கேள்விக்கு, “ஹோட்டல் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தெளிவாக சரியாக கேட்டு இருந்தார். அதில் மாற்றுக் கருத்து இல்லை, நகைச் சுவையான விஷயமாக கேட்டிருந்தார். அதற்கு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட அனைவரும் நகைச் சுவையாக பார்த்தனர், அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் தான் ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் இதை பெரிதாக்கி கொண்டு உள்ளனர் என்பது தான் எங்கள் தரப்பு கருத்தாக உள்ளது.
காங்கிரசார் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதற்கு உரிய பதில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தான் கூற வேண்டும், வானதி சீனிவாசன் கூறும்போது அவர் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் இருந்தவர் தான் என்றும் கூறுகிறார். அவர்களுக்குள் எதார்த்தமாக பேசியதை விட, உரிமையுடன் பேசியதாக தான் எனக்குத் தெரிந்தது. இதில் நாம் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, வானதி சீனிவாசன் அவர்கள் தான் அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்களா? அல்லது அவராக சென்று மன்னிப்பு கேட்டாரா என்பது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும்” என்று விஜய பிரபாகரன் கூறினார்.
திருமாவளவன் ’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்கிற முழக்க வீடியோ ட்விட்டரில் பதிவு செய்து விட்டு நீக்கியது குறித்து கேள்விக்கு, ”அவர் பதிவு செய்தாரா? அல்லது அட்மின் பதிவு செய்தாரா? என்பது தெரியவில்லை, அட்மின் பதிவு செய்ததாக ஒரு வார்த்தையில் ஈசியாக முடித்து விட்டார். அட்மின் பதிவு செய்து இருந்தால் அதற்கு நாம் கருத்துக் கூற முடியாது” என்று கூறினார்.
மதுவிலக்கு மாநாட்டிற்கு தே.மு.தி.க.,விற்கு அழைப்பு பற்றி குறித்தான கேள்விக்கு, “தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுவிலக்கிற்காக எத்தனையோ போராட்டங்கள், மாநாடுகள் கேப்டன் உடன் இணைந்து நடத்தி உள்ளன, இன்று திருமாவளவன் எடுத்த முயற்சிக்கு தே.மு.தி.க சார்பில் வரவேற்பதாகவும், இதுவரைக்கும் எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை, அழைப்பு வந்தால் தலைமைக் கழகம் அதற்கான அறிவிப்பை அறிவிக்கும் என்றும் விஜய பிரபாகரன் கூறினார்.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் குறித்தான கேள்விக்கு, “கோட் திரைப்படம் நன்றாக இருந்தது, கேப்டன் நடித்த காட்சிகளை எனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்த்தேன், நீண்ட நாள் கழித்து கேப்டன் திரையில் வரும் காட்சிகளை பார்த்த அந்த இரண்டு நிமிடம் எங்களுக்கு உணர்வு பூர்வமாக இருந்தது என்று விஜய பிரபாகரன் கூறினார்.
கோவை மாவட்டத்தை தே.மு.தி.க கோட்டையாக மாற்றுவோம் என பேசியது குறித்தான கேள்விக்கு, “வார்த்தையில் கூற முடியாது செயலில் காட்டுவோம்” என்றார்.
2026 தேர்தலில் தே.மு.தி.க - த.வெ.க கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “முதலில் விஜய் அண்ணனுக்கும் சரி, த.வெ.க கட்சிக்கும் சரி, முதலில் அவர்களுடைய மாநாடை நடத்தி முடிக்கட்டும். அவர்களுடைய சேவைகள், கொள்கைகள் சொல்லி மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்று பார்த்து விட்டு தான் கூட்டணி சேர்வதா? என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும், அவருடைய கொள்கை, அவருடைய தனித்துவம் என்ன என்று நிரூபிக்கட்டும், அதற்குப் பிறகு கூறுகிறோம். கட்சி தற்பொழுது ஆரம்பித்தது அவர், தே.மு.தி.க வுடன் கூட்டணி குறித்து அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
தே.மு.தி.க 20 ஆண்டு கால பழமையான கட்சி. இன்றோ, நேற்றோ ஆரம்பித்த கட்சி அல்ல. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ரசிகர் மன்றம் இருந்த காலத்தில் இருந்து எங்களை கட்டுக் கோப்பாக கேப்டன் வளர்த்து வந்தார், அந்த வளர்ப்பு தான் கட்சியாக மாறியது. அதனால் இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும் என்றார். தே.மு.தி.க கட்சி எதிர்க் கட்சியாக இருந்து உள்ளது, ஆனால் விஜய் இன்று தான் கட்சி ஆரம்பித்து உள்ளார், நடிகர் விஜய் மிகப்பெரிய உச்ச நட்சத்திரம் என்பது மாற்று கருத்து இல்லை, கூட்டணி சந்தர்ப்பம் ஏற்படும் போது அதற்கான விளக்கமும், பதிலும் எங்களிடம் இருந்து வரும் என விஜய பிரபாகரன் கூறினார்.
3 ஆண்டு கால தி.மு.க ஆட்சி குறித்தான கேள்விக்கு, “அதை மக்களிடத்தில் தான் கேட்க வேண்டும். நான் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவைக்கு வந்து உள்ளேன், சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகத் தான் உள்ளது. மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படவில்லை, எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம் போன்ற பிரச்சனைகள் உள்ள போது தேவையில்லாமல் கார் பந்தயம் நடத்துகின்றனர். அவர்கள் இன்று ஆட்சிக்கு வரவில்லை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்து விட்டனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் பொது மக்களுக்கு எதுவும் கொண்டு வரவில்லை, வெறும் விளம்பர திட்டங்களாக மட்டுமாக உள்ளது” என்று விஜய பிரபாகரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.