தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பியிருந்த நிலையில் அவர் இன்று மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், கடந்த செப்டம்பர் 23ம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்துக்கு ம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அதனால், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
இந்த நிலையில், விஜயகாந்த் இன்று மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்பவ வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"