தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று (டிசம்பர் 28) மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பின்னர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் அஞ்சலிக்காக கொண்டுச் செல்லப்படும்.
விஜயகாந்த் உடல் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டப்போது அவரது மனைவி பிரேமலதா துக்கம் தாளாமல் வெடித்து கதறினார். என் தெய்வமே போயீட்டிங்களா, எழுந்திருங்க என விஜயகாந்த் உடல் அருகே கதறி அழுதார்.
இந்தநிலையில், சாலிகிராம் வீட்டிற்கு வந்த நடிகரும் விஜயகாந்தின் நண்பருமான தியாகு, கதறியபடி அஞ்சலி செலுத்தினார். அப்போது அய்யோ… விஜி போயிட்டீயேடா.., எங்களுக்கு இனி யாரு இருக்கா… என கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.
தொண்டர்கள் பலர் சாலையில் உருண்டு அழுதனர். எல்லோரையும் வாழ வச்சீங்களே தலைவரே, திரும்ப வாங்க என கதறி அழுதனர்.
நடிகர் வையாபுரி கூறுகையில், எனக்கு கல்யாணம் நடந்தப்போது வடபழனி கோவிலுக்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்தவர் கேப்டன். நடிகர்களை மதுரை, நெய்வேலி, சிங்கப்பூர், மலேசியா நிகழ்வுகளுக்கு பத்திரமாக அழைத்துச் சென்றவர். எந்தச் சர்ச்சையிலும் சிக்காதவர். இனி எங்கள் குறைகளை யாரிடம் சொல்வோம் என்று தெரியவில்லை. கேட்காமலே உதவி செய்பவர் கேப்டன் தான் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“