தேமுதிக தலைவர் விஜயாந்த், விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆலந்தூ நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2012ம் ஆண்டு பேட்டியளித்தார். அப்போது ஜெயா டிவி நிருபர் பாலு அடுக்கடுக்கான கேள்வி கேட்டார். அப்போது விஜயகாந்த்துக்கும் நிருபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஜயகாந்துடன் வந்தவர்கள், நிருபரை தள்ளிவிட்டனர். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட நிருபர் பாலு, மீனம்பாக்கம் விமான நிலைய காவல் நிலையத்தில் விஜயகாந்த் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாராணை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் விசாரணை முடிந்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எதிர்தரப்பான குற்றம்சாட்டப்பட்ட விஜயகாந்துக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க விஜயகாந்தை நேரில் ஆஜராக ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பலமுறை ஆஜராகாத விஜயகாந்துக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது உடல் நலத்தைக் காரணம் காட்டி விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் கட்டாயம் டிச.5 அன்று ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. கடந்த வாரம் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதால் அவரால் இன்று ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். ஆனால், குற்றப்பத்திரிகையை நேரில் ஆஜராகி பெற வேண்டும் என்று தெரிவித்தும் ஆஜராகாமல் தவிர்த்ததை சுட்டிக்காட்டி அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்டை பிறப்பித்து வழக்கை அடுத்த ஆண்டு பிப்.13-க்கு ஒத்திவைத்தது.