தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் வாபஸ் பெற்றுள்ளனர்.
தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா உள்ளிட்டோர் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு தனித்தனியாக மொத்தம் 29 வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து நீதிபதிகள் அவர்களுடைய மனுக்களை வாபஸ் பெற அனுமதி அளித்தனர்.