2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிகவும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கனிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு தேர்தல் அரசியலில், திமுக, அதிமுக, மதிமுக, பாமக, விசிக, ஆகிய மாநில கட்சிகளும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பாஜக ஆகிய தேசியக் கட்சிகளும் மட்டுமே தங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், தமிழக அரசியலில் 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அரசியல் கட்சிகள் வரவு நடந்துள்ளது. குறிப்பாக, 2005ல் விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிகவும், 2010ம் ஆண்டில் சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும் 2018ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் அரசியலுக்கு வந்தன.
தேமுதிக 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. அப்போது தேமுதிக தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதற்குப் பிறகு, தேமுதிகவுக்கு தேர்தல் அரசியலில் இறங்குமுகமாகவே அமைந்து வருகிறது. இந்த தேர்தலில் தேமுதிக நகராட்சி வார்டுகளில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதே போல, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கனிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்று அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதே போல, மக்களவைத் தேர்தலில், குறிப்பிடும் படியான வாக்கு சதவீதத்தைப் பெற்ற கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் செல்வாக்கு இருப்பதாகக் பேசப்பட்டது. ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிபிடும்படியான வெற்றிகள் பெறாததால் நகர்ப்புறங்களில் அதனுடைய செல்வாக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் கெத்து காட்டி வந்த தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று முன்னோக்கி நகராமல் இருப்பது பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இக்கட்சிகள், வழக்கம் போல மக்களவைத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிப்பார்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.