மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பட்டாசு விபத்துகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. தீபாவளிக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து வருங்காலத்தில் வெடி விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள், சட்ட ஆலோசனை உள்ளிட்ட அரசியல் முன்னெடுப்பு செய்து வருகிறார்கள். மறுபுறம் அவரது படத்திற்கு சிக்கல்கள் வருகின்றன. குறிப்பாக அண்மையில் அவரது படத்தின் இசைவெளியீடு விழாக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, "இதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அவர்களிடம் கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள். அவரிடம் கேள்வி கேட்டால் தான் அதற்கான பதில் கிடைக்கும்" என்று கூறினார்.
தொடர்ந்து காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "இந்த பிரச்சனை காலம் காலமாக நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. இதற்கு ஒரே தீர்வு நதிகள் இணைப்பு தான். மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“