தேமுதிக தலைவரை விஜயகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என தேமுகவி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் அவரது கட்சியைச் சேர்ந்தவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் பால் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது அவற்றில் நச்சுத்தன்மை உள்ளது என்று மத்திய அரசு கூறி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மாநில அமைச்சர், அரசு விநியோகிக்கும் பாலில் கலப்படம் இல்லை. தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும் என கூறி உள்ளார். எது எப்படியோ மக்கள் குடிக்கும் பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிராவில் இரவோடு இரவாக அவசர கதியில் ஆட்சி அமைத்துள்ளார்கள். அங்கே மிகப்பெரிய குழப்பமான சூழ்நிலையை உருவாக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவ்வளவு அவசரமாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அங்கே அதிகாரப்பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பின்னர் எந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் எங்கு போட்டியிடுவது? என்பதை முடிவு செய்யலாம். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த எங்கள் கட்சியில் நாங்கள் குழு அமைத்துள்ளோம். அதன் மூலம் பேசி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
அப்போது, செய்தியாளர்கள், அமைச்சர் பாஸ்கரன் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த்க்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியது பற்றி பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, “அவர் யார் என்று எனக்கு தெரியாது. இது குறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.