நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று(ஆகஸ்ட் 25) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்த், அரசியலில் கால் பதித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய விஜயகாந்த், பின் நடிப்பிலிருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வந்தார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். பின் அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தோல்விகளை சந்தித்தது. உடல் நலக் குறைவு காரணாக விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி அவ்வப்போது தனது தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் இரு கரங்களையும் உயர்த்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். விஜயகாந்த்தை காண தொண்டர்கள் தேமுதிக அலுவலக்கத்தில் குவிந்தனர். கோயில் பிரசாதம், பொன்னாடைகள் எனப் பல பொருட்கள் கொண்டு வந்து வழங்கினர்.
விஜயகாந்த் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவை தொடர வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நேற்று பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil