தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதிமுக முதலில் வேகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினாலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இழுபறியாக இருந்து வந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியது. ஆனால், கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கி கட்சியான தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு நிகரான எண்ணிக்கையில் இடங்களைத் தர வேண்டும் என்று உறுதியாக இருந்துவந்தனர். தேமுதிக 25 தொகுதிகளை கேட்டனர். ஆனால், அதிமுக 15 தொகுதிகளைத் தருவதாகக் கூறியது. இதற்கு தேமுதிக ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக நிர்வாகிகளுடன் பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரலாமா? அல்லது தனித்து போட்டியிடும் முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜகாந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக கேட்ட தொகுதிகளை எண்ணிக்கையை தராததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியடையும் என்று கூறினார்.
தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இன்று தேமுதிக சார்பில் விஜயகாந்த் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சித் தொண்டர்களின் கருத்துகளைக் கூறினார்கள். அந்த அடிப்படையில், அதிமுகவில் நாங்கள் கேட்ட தொகுதிகளும் எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால், அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்து விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவைப் பொறுத்தவரை எங்கள் அனைவருக்கும் இன்று தீபாவளி. கண்டிப்பாக அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியடைவார்கள். முக்கியமாக, கே.பி.முனுசாமி அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார். அவர் அதிமுகவுக்காக செயல்படவில்லை. அவர் அங்கே பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.” என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷை நேரில் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.
இது குறித்து பொன்ராஜ் ஊடகங்களிடம் கூறுகையில், “விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மக்கள் நீதி மய்யத்தோடு வந்து இணைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கூடிய சீக்கிரம் நான் பிரமலாதா, விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணிக்கு வர அழைக்க இருக்கிறேன்.” என்று
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்திருப்பது குறித்தும் எல்.கே.சுதீஷ் கருத்து குறித்தும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “தேமுதிக முடிவு துரதிருஷ்டவசமானது. நன்றி மறந்துவிட்டு தேமுதிக பேசக்கூடாது. அவருடைய கருத்து தமிழக மக்கள் சிரிக்கக் கூடிய வகையில்தான் இருக்கும். 2021ல் தமிழகத்தை ஆளப்போவது அதிமுகதான் என்பது அவர்களுக்கு தெரியும். நிதானத்தை இழந்துவிடக்கூடாது. ஆத்திரத்தில் வார்த்தைகளை சொல்லிவிட்டால் திரும்ப வராது. அந்த பக்குவம் அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டும். அந்த பக்குவம் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்களுக்கும் இருக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது. கூட்டணி பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது சேற்றைவாரி இறைக்கக் கூடாது. வார்த்டஹிகலை அளந்து பேசாமல் இருந்தால் அதற்குரிய பதிலடி கிடைக்கும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.