“ராமருக்கு வரலாறோ, ஆதாரமோ கிடையாது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கர், “ராமருக்கு வரலாறு கிடையாது; ஆவணமும் கிடையாது. ஆனால் அவருக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு இருப்பதாக சிலர் கூறுகின்றனர்” என்றார்.
மேலும், “ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால், வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டி விடுவார்கள்” என்றார்.
சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க.வின் மற்றொரு அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர்தான்” எனக் கூறினார். புதுக்கோட்டை கம்பன் விழாவில் பேசிய அவர், “ஈ.வெ.ரா, சி.என். அண்ணாத்துரை, கருணாநிதி, மு.க ஸ்டாலினுக்கு முன்னோடியாக நாங்கள் ராமரை பார்க்கிறோம்” என்றார். இந்தப் பேச்சு அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“