/indian-express-tamil/media/media_files/2025/09/23/dmk-stalin-2025-09-23-15-04-26.jpg)
MK Stalin
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 23) மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள் ஆகியோரும் உடனிருந்தனர். கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள், மத்திய அரசின் நிதிப் பங்கீடு தொடர்பான கோரிக்கைகள், தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு, ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
*நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டும்.
*தங்கள் தொகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை கட்சித் தலைமைக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
நலத்திட்ட முகாம்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை:
*எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" மற்றும் "நலம் காக்கும் ஸ்டாலின்" ஆகிய நலத்திட்ட முகாம்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். இந்த முகாம்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
*குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், இதற்காக நலத்திட்ட முகாம்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்:
"2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நமது கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று ஒரு வரலாற்று சாதனையைப் படைத்தது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்" என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
*மேலும், அமைச்சர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள்:
*இறுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us