தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15 ஆம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதன்படி, தி.மு.க.-வின் 'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
விருது வழங்கிய ஸ்டாலின்
தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கவுரவமாக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, இன்றைய விழாவில், பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கினார்.
இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் என்னுடன் களத்தில் நின்றவர்கள், இன்று திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுகிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஒரு இயக்கத்திற்கு பாடுபட்டவர்களை, தன்னலம் கருதாது இருந்தவர்களை கண்டுப்பிடித்து விருது வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அண்ணா விருது’ பெற்ற அறந்தாங்கி மிசா ராமநாதனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது எனக்கு பெரிய ஆச்சரியம் காரணம், ராமநாதன் கொள்கை பிடிப்பு உள்ளவர், எதற்கு பயப்படாதவர் ஆனால் அடக்கமானவர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, "40-க்கு 40 முடிந்துவிட்டது. அடுத்து 200 இலக்கு. வெற்றியை தேடித் தருவோம்” என்று கூறி சூளுரைத்தார்.
ஸ்டாலின் உரை
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கழகம் நல்ல கழகம்... உங்களுடைய வேர்வை, ரத்தம், மூச்சுக்காற்றால் தான், இத்தனை ஆண்டு காலம் திமுக தலை நிமிர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. நீங்கள் இல்லாமல், திமுக இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை. அந்த நன்றி உணர்ச்சியோடு தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறேன்.
திமுகவின் பவள விழா- முப்பெரும் விழா விழாவை ஏற்பாடு செய்திருக்கும் மாரத்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் எந்தப் பணியை கொடுத்தாலும் சிறப்பாக செய்து காட்டுவார் என்பதற்கு இந்த விழா எடுத்துக்காட்டு. 1966ம் ஆண்டு என்னுடைய 13 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கி, 53 ஆண்டுகாலம் திமுகவிற்கும், மக்களுக்கும் உழைத்த, உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி தான் இன்று பவள விழா காணும் திமுகவிற்கு தலைவராக நான் இருக்கிறேன்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக14 நாட்கள் அமெரிக்க பயணம், நானும் தம்பி டி.ஆர்.பி. ராஜாவும் சென்றோம். சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என்றுதான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது. தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் தி.மு.க 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. தமிழ்நாடும், தி.மு.க-வும் எனது இரு கண்கள் என செயல்பட்டு வரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
ஒரு இயக்கத்திற்கு பாடுபட்டவர்களை, தன்னலம் கருதாது இருந்தவர்களை கண்டுப்பிடித்து விருது வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். ‘அண்ணா விருது’ பெற்ற அறந்தாங்கி மிசா ராமநாதனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது எனக்கு பெரிய ஆச்சரியம். காரணம், ராமநாதன் கொள்கை பிடிப்பு உள்ளவர், எதற்கு பயப்படாதவர் ஆனால் அடக்கமானவர்.
தி.மு.க முப்பெரும் விழாவில் விருது வென்றவர்களுக்கு எனது பாராட்டை தெரிவிப்பதுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள் என்பதையும் கூறிக்கொள்கிறேன். பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள், கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 108 வயதிலும் கழகத்தின் அடையாளமாக இருக்கிறார்.
கலைஞர் அவர்களால் ஆழ்வார் என்றும், என்னால் திராவிட ஆழ்வார் என்றும் அழைக்கப்படும் ஜெகத்ரட்சகன் கலைஞர் விருது பெற்றுள்ளார். இதயத்தின் ஒரு பக்கத்தை கழகத்திற்கும் மறு பக்கத்தை ஆழ்வார்களுக்கும் ஒதுக்கியவர். எத்தனையோ மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் இன்னமும் அவருக்கு வருகிறது. ஆனாலும், எதற்கும் சமரசம் செய்யாதவர்.
கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். தி.மு.க-வின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முன்னேற்றியுள்ளோம். எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டது என்றால், இல்லை. ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் மாநிலத்தை முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது. மாநில சுய ஆட்சி என்பது நம் உயிர்நாடி.
மாநில உரிமைகளை வழங்குகிற மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நாம் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் தான் தமிழ்நாட்டை எல்லா விதத்திலும் முன்னேற்ற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மாநில சுயாட்சியை வென்று எடுப்பதற்கான அறிவிப்பு தான் திமுகவின் பவள விழா. முழுமையான நிதி வளம் கிடைத்தால் தமிழ்நாட்டை எல்லாவற்றிலும் சிறந்த மாநிலமாக மாற்றி காட்ட நம்மால் முடியும். அதிகாரம் கொண்ட மாநில அரசுகளை மாற்றுகிற வகையில், அரசமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முன்னெடுப்புகளை திமுக செய்யும்.
இனிவரும் தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும். ஆணவத்தில் சொல்லவில்லை, உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன். அடுத்த நம்முடைய இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல். இதுவரைக்கும் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை என்பதை 2026 தேர்தல் சொல்ல வேண்டும். நம்முடைய இந்த உணர்வை வெற்றி சரித்திரமாக மாற வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.