ரஜினிகாந்த் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஆச்சர்யம் இல்லை - மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பதில் ஆச்சர்யம் இல்லை

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்ற ஜனநாயகத்திலும், இந்துத்துவாவின் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும், ஒற்றைச் செயல் திட்டத்தை நிறைவேற்றிடும் நோக்கத்திலும் ஆக்கபூர்வமான திருப்புமுனையாக அமையும் என்று நாடெங்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

“வளர்ச்சி” “வேலை வாய்ப்புகளை உருவாக்குவது” “ஊழலை ஒழித்து கருப்புப் பணம் முழுவதையும் வெளிக்கொணர்வது” “பொருளாதார முன்னேற்றம் “வேளாண்மை விளைபொருள்களின் விலையை இரட்டிப்பாக்குவது” போன்ற தேர்தல் முழக்கங்களை முன் வைத்து நாட்டுமக்களை ஏமாற்றி வெற்றி பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்றைக்கு கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே மறந்து விட்டு, இந்துத்துவா அமைப்புகளின் கிடுக்கிப் பிடியிலிருந்து மீள முடியாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்த நான்காண்டு காலம் சிறிது சிறிதாகச் செல்லரிக்கச் செய்து, கடும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கி இன்றைக்கு சேலம் எட்டுவழிப் பசுமைச்சாலைத் திட்டம் வரை தமிழக மக்களின் கருத்துகளை மதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை இதுவரை மதிக்கவில்லை.

15 ஆவது நிதிக்குழுவின் தன்னிச்சையான “விசாரணை வரம்பினால்”தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியாதாரத்தை திட்டமிட்டு வெட்டும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “எய்ம்ஸ்”மருத்துவமனையைப் பெறவே நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாட்டு மக்கள் தள்ளப்பட்டார்கள். மாநிலத்திற்கு வர வேண்டிய மத்திய அரசு நிதி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சிக்குக் கமிஷன் அமைத்து முதன் முதலில் குரல் கொடுத்த தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் “இரட்டையாட்சி” முறை நடத்த தூண்டி விட்டு, மாநில உரிமைகளை பா.ஜ.க. அரசு பந்தாடிக் கொண்டிருக்கிறது.

அன்னைத் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழிக்கு அரியாசனம் போடும் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. அரசு அமைந்திருக்கிறது. இந்தித் திணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, செம்மொழியாம் தமிழை சிறுமைப்படுத்தியது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைகளில் தமிழகத்திற்கான திட்டங்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நான்காண்டு ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, சர்வாதிகாரத்தின் முள்ளாசனத்தில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை எல்லாம் தோற்கடித்து இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த உணர்வுகளை அவமதித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தூக்கியெறிந்து, மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடாவடியாகப் பறித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை மக்களவையில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, “ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்ற பிரச்சனையில் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்”.

இதைத் தொடர்ந்து, சென்னை அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தி.மு.க தார்மீக ஆதரவு அளித்து உள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது. எந்த பிரச்சனைக்கும் முதல்வர் முறையாக பதில் சொல்வது இல்லை. தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் செயல்களால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. கார்களிலேயே பணமும், தங்கமும் தமிழகத்தை சுற்றிவரும் நிலை இருக்கிறது. அதற்கு அரசிடம் பதில் இல்லை. வருமானவரி சோதனை உள்நோக்கத்துடன் நடைபெறுகிறதா என மத்தியஅரசு விளக்கம் அளிக்க வேண்டும் . வரும் 23 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். எட்டு வழிச்சாலை உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களுக்கும் ரஜினிகாந்த் ஆதரவு அளித்து வருகிறார். இதில், எங்களுக்கு ஆச்சர்யம் ஏதுமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close