Advertisment

"அதிமுக அரசின் ‘அவுட் சோர்சிங்’ மோசடி!" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘அவுட்சோர்சிங்’ அடிப்படையில் பணிபுரிவோருக்கு அரசின் துறைகளில் ‘க்ளைம்’ செய்யப்படும் முழு தொகையையும் வழங்கி, அவர்களுக்கும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்

author-image
WebDesk
Nov 27, 2017 17:47 IST
"அதிமுக அரசின் ‘அவுட் சோர்சிங்’ மோசடி!" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பினைத் தொடர்ச்சியாகத் தேட முயன்றும் கிடைக்காமல் விரக்தியிலும், மனவேதனையிலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்களில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு, எப்போது நம் வாழ்வில் வசந்தம் வீசும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காலமெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘குதிரை பேர’ அதிமுக அரசோ புதிய தொழிற்சாலைகளை வரவிடாமலும், புதிய முதலீடுகளை கொண்டு வர விரும்புவோரை, பாழாய்ப்போன ‘கமிஷன் கலாசாரத் தீப்பந்தத்தைக்’ காட்டி மிரட்டி வெளி மாநிலங்களுக்கு விரட்டி அடித்தும், தமிழகத்தின் வளர்ச்சியை மிகவும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் படுமோசமான நிர்வாகத்தில் ஈடுபட்டு வருகிறது. ‘விஷன் 2023’ என்று அறிவித்துவிட்டு, எவ்விதத் தொலைநோக்குப் பார்வையுமே இல்லாமல் இந்த ‘குதிரை பேர’ அரசு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருளடையச் செய்து கொண்டிருக்கிறது. ஏன், இன்று சமயபுரம் கோயில் டெண்டரில் கமிஷன் கேட்டு மணச்சநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மிரட்டும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த கமிஷன் ராஜ்யத்தில் இப்போது ‘அவுட்சோர்சிங்’ முறைகேடு என்னும் பேய் தலை விரித்தாடுகிறது.

Advertisment

தற்போது தமிழக அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. நிர்வாகத் திறமை கிஞ்சிற்றும் இல்லாததால் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியாமல் இந்த அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மக்களின் முக்கிய நலப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஆவின் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றில் ‘அவுட் சோர்சிங்’ அடிப்படையில் தனியார் ஏஜன்சிகளின் மூலம் வெளிப் பணியாளர்களை நியமித்து, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தையே கைவிட்டு விடுவதுபோல் இந்த ஆட்சி வேலைவாய்ப்பற்றுத் தவித்து வரும் இளைஞர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி அராஜகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கிவிடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’ நியமன முறையில் தாண்டவமாடுகிறது.

இந்தப் பணியாளர்களுக்கு உரிய இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் போன்ற பிடித்தங்களைச் செய்கிறோம் என்று கூறிவிட்டு அதுமாதிரி பிடித்தங்கள் ஏதும் செய்யாமல் அந்த பணத்தையும ‘அவுட்சோர்சிங்’ நிறுவனங்களே ‘ஸ்வாகா’ செய்து ஏப்பம் விட்டுவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு வெளிப்பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல்வேறு அரசுத் துறைகளிலும் நடக்கும் இந்த மெகா மோசடி பற்றி அரசு அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ கண்டுகொள்வதில்லை என்றும், அதற்குக் காரணம் ‘அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கும்’ ஆட்சியிலிருப்போருக்கும் - அதாவது அமைச்சர்களுக்கும் ஒருசில அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள ரகசிய உடன்பாடு என்றும் வரும் செய்திகளைப் புறந்தள்ளிவிட முடியாது. நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றில் இந்த மோசடி அதிகமாகவே நடக்கிறது என்றும், அங்கு உள்ளபடியே வேலை செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், சம்பளம் கொடுப்பதாகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்றெல்லாம் பலவிதமான குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.

ஆகவே, அரசுத் துறைகளில் ‘அவுட்சோர்சிங்’ அடிப்படையில் பணியாளர் சேர்ப்பதை உடனடியாகக் கைவிட்டு, நிரந்தரமாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் பணியாளர்களை சட்ட விதிமுறைகளை அனுசரித்து முறைப்படி நியமிக்க வேண்டும் என்றும், காலிப்பணியிடங்களை வெளிப்படையான தேர்வு முறை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை ‘அவுட்சோர்சிங்’ அடிப்படையில் பணிபுரிவோருக்கு அரசின் துறைகளில் ‘க்ளைம்’ செய்யப்படும் முழு தொகையையும் வழங்கி, அவர்களுக்கும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இதுபோன்ற பணியாளர் நியமனங்களில் தனிக்கவனம் செலுத்தி, அரசு நிர்வாகத்தில் புகுந்துவிட்ட ‘அவுட்சோர்சிங் முறைகேடுகள் - மோசடிகள்’ குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு விபரங்களை வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#Dmk #Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment