திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற திட்ட பணிகளையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலணியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம். பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவரது வீடு உள் வழியாகத்தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர்.
அப்போது நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்பியான திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, கல்வெட்டில் அவர் பெயர் போடாதது அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டு மீது சோடா பாட்டில், கற்கள், கம்பு உள்ளிட்டவைகளால் தாக்குதல் நடத்தினர். இதில் சிவாவின் கார், இருசக்கர வாகனம், வீடு உள்ளிட்டவைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக சிவாவின் ஆதரவாளர்களை நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர்.
இந்தத் தாக்குதலை தடுத்த லதா என்ற காவல் அலுவலர்க்கு கை முறிந்தது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
திமுக உட்கட்சி மோதலால் திருச்சி சிவா, அமைச்சர் கே என் நேரு ஆகிய இரு தரப்பினரும் நீதிமன்ற காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேபோல் திருச்சி சிவா எம்பி இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. யார் மீதும் இதுவரை எந்த வழக்குகளும் பதியப்படவில்லை என்றாலும் திருச்சி சிவா எம் பியின் தரப்பு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை. அவர்களது தரப்பில் தங்கள் வீடு மீது தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிய காவல் ஆணையரிடம் முறையிட போவதாக சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.