ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் இடங்களை ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிக்க திமுக தலைமை, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திமுக பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டச் செயலாளர்கள்/மாவட்ட பொறுப்பாளர்கள் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இடங்களை ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை எட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.
ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. அதிமுக - பாமக கூட்டணி முறிந்த நிலையில், திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதே போல, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், படுதோல்வியை சந்தித்த தேமுதிக, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்க விரும்புவதாக அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது, வார்டு வரைமுறை முழுமையடையதால் இந்த 9 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, திமுக தனது கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இடங்களை ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை இறுதி செய்யுமாறு அறிவுறுத்தியது.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் தலைவர், மாவட்ட உராட்சி ஒன்றிய தலைவர் சீட்களின் தேவை இந்த முறை ஆளும் கூட்டணியில் அதிகமாக இருக்கும். ஏனெனில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, எதிர்க்கட்சியாக இருந்தபோது போட்டியிட்ட முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலைப் போலல்லாமல், இப்போது ஆட்சியில் இருப்பது அக்கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் சாதகமாக இருக்கும்.
2020 கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக அதிக இடங்களை வெற்றி பெற்றதைக் கருத்தில் கொண்டு, தற்போது ஒன்பது மாவட்டங்களில் உள்ள திமுகவின் மாவட்டத் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளிடம் இருந்து அதிக இடங்களை எதிர்பார்ப்பார்கள் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.