குடியுரிமை திருத்தச் சட்டம், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்த தமிழ் அகதிகள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், மத துன்புறுத்தலுக்கு’ உள்ளானவர்கள் அவர்களை, சி.ஏ.ஏ விலக்கி வைக்கிறது என தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) 2019, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த தமிழ் அகதிகளை விலக்கி வைக்கிறது. இந்த திருத்தச் சட்டம் தமிழ் இனத்திற்கு எதிரானது என்று தமிழகத்தில் ஆளும் தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து வந்தவர்கள் பெரும்பான்மையாக இந்துக்கள் என்பதால் அங்கே அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தலை எதிர்கொண்வர்கள் என்று வாதிட்டுள்ளது.
தி.மு.க அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், “இந்த பிரச்னைக்குரிய சட்டம் தமிழ் இனத்துக்கு எதிரானது என்றும், தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களை இந்த சட்டம் விலக்கி வைக்கிறது. பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் அகதிகள் குடியுரிமை இல்லாத காரணத்தாலும், குடியுரிமை அளிக்காத காரணத்தாலும் அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைகள் பறிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை இந்த சட்டம் புறக்கணிக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்டம் “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. இந்து, சீக்கியர், பௌத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. இந்த சட்டம் முஸ்லீம் மதத்தினரை வெளிப்படையாக விலக்குகிறது” என்று தி.மு.க வாதிட்டுள்ளது.
தி.மு.க-வின் பிரமானப் பத்திரத்தில், “இலங்கையின் பௌத்த சிங்கள பெரும்பான்மை மக்கள் வரலாற்று ரீதியாக தமிழர்களைப் படையெடுப்பாளர்களாகக் கருதி, சிங்களப் பிரதேசத்தை அத்துமீறி நடந்து வருகின்றனர்…. இலங்கை அரசியலமைப்பின் 9வது சரத்தின்படி, இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதுடன், அனைத்து மதங்களுக்கும் அனைத்து உரிமைகளையும் உறுதி செய்யும் அதேவேளை, பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாககக் கொண்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.-வின் பொருள் மற்றும் காரணங்களின் அறிக்கையின்படி, “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை உள்ளடக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களின் அரசியலமைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தை அரசு மதமாக அளிக்கிறது. இதன் காரணமாக மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டனர்” என்று கூறியுள்ளது. தி.மு.க கூறியது, “இலங்கையின் நிலைமை இந்த மூன்று நாடுகளில் உள்ள நிலைமைக்கு நிகரானது. ஏனெனில் இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்ததால் மதத் துன்புறுத்தலை எதிர்கொண்டனர். அவர்கள் சிறுபான்மை அந்தஸ்து காரணமாக பெரிய அளவில் துன்புறுத்தலை எதிர்கொண்டனர்.” என்று தி.மு.க கூறியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 4, 2010 நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் தமிழர்கள் மொத்தம் 4,61,631 பேர் இருப்பதாக தி.மு.க-வின் பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “தமிழ் அகதிகளின் அவலநிலை குறித்து திட்டவட்டமாக மௌனம் காக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ் அகதிகள் மீதான மத்திய அரசின் மாற்றாந்தாய் நடத்தை அவர்களை தொடர்ந்து அச்சத்தில் வாழ வைத்துள்ளது என்றும் வாதிட்டது. நாடு கடத்துதல் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம். நாடற்றவர்களாக இருப்பதால், அவர்களுக்கு அரசு சேவைகள் அல்லது அமைப்பாக்கப்பட்ட தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு, சொத்து வைத்திருக்கும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, குடிமக்கள் மற்றும் பிறர் பெற்ற அரசின் சலுகைகளை அனுபவிக்கும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”