ஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு

ஜாக்டோ – ஜியோ போராட்டம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை விசாரணைக்கு ஏற்காததைக் கண்டித்து திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 2வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்பிறகு பேசிய ஸ்டாலின், ஜாக்டோ – ஜியோவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரசு ஊழியர்களை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஆதிஷேஷா குழுவை கலைக்க வேண்டு என்றும் மக்களுடைய சேவைகளுக்கு அரசு ஊழியர்கள் பணி அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்களின் நலன் கருதி 7வது ஊதிய குழுவை அமல்படுத்தியுள்ளதாகவும் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும் அதனை ஏற்று அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 12 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வரி வருவாயில் 70 சதவீதம் செலவிடப்படுவதாகவும் மக்களின் நலன் கருதி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மாநில அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு போராட்டங்கள் நடத்தி அரசுக்கு நெருக்கடி தருபவர்களுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், போராட்டங்களை கைவிட்டு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறி முதலமைச்சர் பழனிசாமியை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

×Close
×Close