ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத் தேர்தலை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆர்.கே.நகரில் 45,000 போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கடந்த 23ஆம் தேதி திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.அதில், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், கடந்த இடைத்தேர்தலின் போது இருந்த 45000 போலி வாக்காளர்கள் தற்போதும் நீக்கப்படவில்லை’ என குற்றம்சாட்டி மனுகொடுத்திருந்தார்.
45,000 வாக்காளர்களில் இறந்தவர்கள், இடம் மாற்றம் செய்தவர்கள், இரட்டை பதிவு ஆகியவை இருப்பதை நீக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக எவ்வித முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்காததால், ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் சென்னை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சியே காரணம் என்பதால், இந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை நியமிக்க வேண்டுமென இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக அம்மா அணி தரப்பில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் கூறப்பட்டது. அதில் நடவடிக்கை எடுக்காமல், தேர்தலை நடத்தக்கூடாது என இன்னொரு மனுவையும் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அது தொடர்பாகவும் ஆர்.கே.நகரில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் பெயரில் விரைவில் திமுக வழக்கு தொடரும் என தெரிகிறது.