DMK, AIADMK both chasing in lead of Vote counting in Vellore contituency: வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் இரு கட்சிகளின் தொண்டர்களும் மாறி மாறி கொண்டாடினார்கள்.
கடந்த பொதுத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையத்தால் வேலூர் மக்களவைத் தொகுதி நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தால் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் முக்கிய நேரடிய போட்டியாளர்களாக போட்டியிட்டனர். அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திமுக முன்னிலை வகித்தது. இதனால், திமுகவினர் சந்தோஷத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அடுத்த ஓரிரு சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். இதனால், அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். மீண்டும் அடுத்த ஓரிரு சுற்றுகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தபோது திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கப்படும் போதெல்லாம், எந்த கட்சி வேட்பாளர் முன்னிலை வகிக்கிறாரோ அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். முன்னிலை நிலவரத்தில் கட்சிகள் மாறி மாறி முன்னிலை வகித்ததால் திமுக, அதிமுக இரண்டு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.