தொண்டாமுத்தூர்: ஸ்டாலினுக்கு பதில் கொடுக்க அதிமுக இறக்கும் ‘அணுகுண்டுகள்’!

அதிமுக தரப்பிலும் இந்தப் பிரச்னையை லேசில் விடுவதாக தெரியவில்லை. ராஜேந்திர பாலாஜியும், விந்தியாவும் எப்படிப் பேசுவார்கள்? என அனைவருக்கும் தெரியும்.

கொங்கு மண்டலத்தில் அதிமுக – திமுக மோதல் நாளுக்கு நாள் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சனிக்கிழமை விடுத்த சவால்களுக்கு பதில் கொடுக்க மறுநாளே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், நடிகை விந்தியாவையும் களம் இறக்கியது அதிமுக.

தமிழகத்தில் திமுக சற்றே பலவீனமான பகுதியாக கொங்கு மண்டலம் கருதப்படுகிறது. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன. எனினும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு திமுக முழுமையான வெற்றியைப் பெற்றது.

சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கொங்கு மண்டலத்தை அதிமுக கோட்டையாக மாற்ற அந்தப் பகுதியை சேர்ந்த சீனியர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற பகுதிகளைவிட கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

சனிக்கிழமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாம்புத்தூர் தொகுதியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண்மணி எழுப்பிய கேள்வி, அதைத் தொடர்ந்து சலசலப்பு, ஸ்டாலினே தலையிட்டு அந்தப் பெண்ணை, ‘அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்திருப்பதாக குறிப்பிட்டது’, திமுக.வினர் அந்தப் பெண்மணி மீது நடத்திய தாக்குதல் முயற்சிகள் என பரபரப்பு ஆகிவிட்டது.

அதேநாளில் செங்கோட்டையனின் கோபி தொகுதியிலும் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின், ‘முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழலை நிரூபிக்காவிட்டால், அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்’ என சவால் விட்டார். தொண்டாம்புத்தூரில் பிரச்னை ஏற்படுத்திய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் டிஜிபி திரிபாதியிடம் மனு கொடுத்தார். தொண்டாமுத்தூரிலும் திமுக.வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் கொங்கு மண்டலத்தில் அனலைக் கூட்டியிருக்கும் சூழலில், ஸ்டாலினுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வேலையை அதிமுக மேற்கொண்டிருக்கிறது. அதே தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் மறுநாளே (ஞாயிற்றுக் கிழமை) ஸ்டாலின் பிரசாரத்திற்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது அதிமுக.

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை விந்தியா ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜியும், விந்தியாவும் பொதுக்கூட்டங்களில் எப்படிப் பேசுவார்கள்? என அனைவருக்கும் தெரியும். அவர்களை அழைத்து ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க வைப்பதன் மூலம், அதிமுக தரப்பிலும் இந்தப் பிரச்னையை லேசில் விடுவதாக தெரியவில்லை.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பே கொங்கு மண்டலத்தில் தேர்தல் சூடு பட்டையைக் கிளப்புகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk aiadmk clash thondamuthur sp velumani meeting against mk stalin

Next Story
நோய்களை குணமாக்கும் பழையசோறு? ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com