காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்க வேண்டிய இறுதி தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
தமிழகத்திற்காகக் காவிரி ஆணையம் அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திமுக சார்பில் தோழமை கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
முன்னதாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அப்போது காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலிருந்ததாலும், வரைவு செயல் திட்ட விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாலும் அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்திருந்த ஸ்டாலின், காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வரைவு செயல் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் விளக்கம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு உள்ள சூழலில் திருத்தங்களுடனான காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை உச்சநீதிமன்றமும் ஏற்கொண்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் விரைவில் இதன் இறுதி தீர்ப்பை வழங்கும் என்று அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது திமுக சார்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடவில்லை என்றால் டெல்டா மாவட்ட விவசாயிகளைத் திரட்டி பெருளவில் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.