திமுக கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரிகள் அடுத்தடுத்து அறிவாலயத்தில் திமுக குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இடதுசாரிகளுக்கு ஒதுக்க திமுக ஆலோசிக்கும் தொகுதிகள் குறித்து தெரிய வந்திருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதரக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தையை திமுக குழு மேற்கொண்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று காலை அறிவாலயம் வந்தனர். அவர்கள் துரைமுருகன் தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் பேசினர்.
மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 2009-ல் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளைப் பெற்றது. அதேபோல இந்த முறை திமுக கூட்டணியிலும் 3 சீட்களை கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை தொகுதிகளை பெறுவதில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால் கோயம்புத்தூரை மட்டும் ஒதுக்கிக் கொடுக்க திமுக விரும்புகிறது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு சீட் தருவதாக ஜெயலலிதா கூறியதை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. எனவே இந்த முறையும் ஒரு சீட்டை ஏற்க மார்க்சிஸ்ட் தயாராக இல்லை என்றே தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி பிடிவாதம் காட்டும் பட்சத்தில் கோவை, மதுரை தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக தயாராகும் என்றே தெரிகிறது.
#ADMK தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் பலத்த தோல்வியை சந்திக்கும் - கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் #CPIM #2019Elections pic.twitter.com/27OJR5EQGV
— CPIM Tamilnadu (@tncpim) 21 February 2019
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழுவினர் இன்று மாலையில் அறிவாலயம் வந்து திமுக குழுவை சந்தித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகப்பட்டினம் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. தென்காசி தொகுதியை மட்டும் ஒதுக்கிக் கொடுக்க திமுக விரும்புகிறது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் ஒரு சீட் வழங்கவே திமுக திட்டமிடுகிறது. நாளை (22-ம் தேதி) மதிமுக, விடுதலை சிறுத்தைகள் குழுவினர் திமுக தலைமையகம் வந்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.