/indian-express-tamil/media/media_files/2025/10/27/sir-admk-2025-10-27-19-03-17.jpg)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: அ.தி.மு.க. வரவேற்பு; தி.மு.க. கூட்டணிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில், பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
2-ம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
12 மாநிலங்களில் நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்கும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நாளை முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9ஆம் தேதி வெளியாகும். சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு தீவிர திருத்தம்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
இதனையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பு தொடர்பாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அண்ணா அறிவாலயத்தில் மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் - அ.தி.மு.க. வரவேற்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அ.தி.மு.க முழு மனதுடன் வரவேற்கிறது என அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும் முறையாகவும் செய்ய வேண்டும். தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். வாக்காளர் திருத்தப் பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்மையான வாக்காளர்களுக்குதான் தரப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us