Advertisment

பா.ஜ.க கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது: தி.மு.க கூட்டணி தலைவர்கள் கருத்து

அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து, “பா.ஜ.க கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது” தி.மு.க கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
ks

“பா.ஜ.க கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது” தி.மு.க கூட்டணி தலைவர்கள் கருத்து

பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அ.தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது என்று தி.மு.க கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியதை அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை மீது தான் எதிர்ப்பு, மோடி கருத்துடன் அ.தி.மு.க ஒத்துப்போகிறது - கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

இந்நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது குறித்து, “பா.ஜ.க கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது” தி.மு.க கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஊடகங்களிடம் கருத்து கூறியிருப்பதாவது: “கூட்டணி முறிவு என்பது, அவர்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறது. உறுதியாக இருக்கும் பட்சத்தில் அது வரவேற்கத்தக்கது. இன்றைய அ.தி.மு.க ஏற்புடைய இயக்கம் இல்லை. மாநில நலனில், மற்றவற்றில் அவர்களுக்கு தெளிவான கருத்து கிடையாது. மோடியின் கருத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

அண்ணாமலை மீது தான் அவர்களுக்கு எதிர்ப்பு. மற்றபடி மோடி கருத்துடன் அவர்கள் ஒத்துப்போகிறார்கள். உங்கள் பிளவின் பின்னணி என்ன? எதில் நீங்கள் அவர்களுடன் வேறுபடுகிறீர்கள்? தனி மனிதரோடு உங்கள் பிரச்னை அவ்வளவு தான். மற்றபடி நீங்கள் மோடியின் கருத்தோடு வேறுபடவில்லை. அதனால் இந்த பிரிவை நான் சந்தேகிக்கிறேன். 

கடந்த கால அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இன்றைக்கும் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பது தமிழில் அழகாக பயன்படுத்தும் சொல். பா.ஜ.க உடன் கொள்கை ரீதியாக வேறுபடுகிறதா என்பதை அ.தி.மு.க தெரிவிக்க வேண்டும். ராமர் கோயில் விவகாரத்தில் ஆதரவாக இருந்தது அ.தி.மு.க தான். பா.ஜ.க-வின் மற்ற திட்டங்களை ஆதரித்தது அ.தி.மு.க தான்.” என்று கூறினார்.

இது ஒரு தந்திரம் - இரா. முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கூறியதாவது: “பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி முறியவில்லை; வளைந்திருக்கிறது. இதற்கு பின்னால் ஏதோ சதியிருக்கிறது. அது பின்னால் தெரியவரும். அமித்ஷாவும் எடப்பாடியும் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று கூறவில்லை. அதன் பின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் நட்டாவை சந்தித்தார்கள். அதுவும் ரகசியமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, இதையெல்லாம் வைத்து, நம்மால் நம்ப முடியாது. பா.ஜ.க உடன் கூட்டணி முறிவு என்கிற தீர்மானத்தை பா.ஜ.க தான் போடச் சொல்லியிருக்கும். இது சந்தேகமான தீர்மானம் தான். 

பா.ஜ.க உடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதாவும் சொன்னார். அந்த கட்சியோடு பின்னால்  எப்படி அ.தி.மு.க கூட்டணி சேர்ந்தது. இந்த அறிவிப்பு முறிவு அல்ல, இது ஒரு வளையல், இதன் பின்னால் ஒரு சூழ்ச்சி அரசியல் இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கிறது. அதற்கு முன்னால் இது தெரியவரும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியிருப்பது நிலையானது அல்ல; பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்; இந்த தந்திரத்தை அ.தி.மு.க உருவாக்கியதா  அல்லது பா.ஜ.க ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது இந்த நாட்டுக்கு நல்லது. ஜனநாயகத்திற்கு நல்லது - ரவிக்குமார் எம்.பி., வி.சி.க பொதுச் செயலாளர்

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு குறித்து வி.சி.க பொதுச் செயலாளர், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் கூறியதாவது: அ.தி.மு.க முடிவை நான் வரவேற்கிறேன். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது இந்த நாட்டுக்கு நல்லது. ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கு நல்லது. எனவே அதில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். 

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க விளங்கி வந்தது. அ.தி.மு.க.வே அதில் இருந்து வெளியேறி இருப்பது வரவேற்கதக்கது. அதை நான் வரவேற்கிறேன். பாஜக அரசியலோ... கருத்தியலோ.. அரசாங்கத்தின் நடவடிக்கைகளிளோ எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி அ.தி.மு.,க இதை அறிவித்து இருந்தால் நாங்கள் வேறு விதமாக பார்த்து இருப்போம். கூட்டணி முறிவு.. அ.தி.மு.க செய்த பெரிய தவறு! பாஜகவிலிருந்து எப்படி விலக முடியும்? நோட் பண்ணீங்களா? அவர்கள் சொன்னது என்னவென்றால் எங்கள் மாநாட்டை கொச்சை படுத்திவிட்டார்கள். எங்கள் தலைவரை கொச்சை படுத்திவிட்டார்கள். என்றுதான் சொன்னார்களே தவிர... கொள்கை தமிழ்நாட்டிற்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. எனவே, இது எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட காரணத்தினால் இந்த மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் அ.தி.மு.க பா.ஜ.க சேர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணத்தில் தான் எங்கள் தலைவர் (தொல் திருமாவளவன்) அன்றைக்கு சொன்னார். இன்றைக்கும் கூட அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு பா.ஜ.க கூட்டணி இல்லை என்ற முடிவு... அதே போன்றதாகத்தான் இருக்கிறது. அ.தி.மு.க ஜெயலலிதா காலத்தில் எப்படி பா.ஜ.க.வை கணித்ததோ அப்படி கணிக்க வேண்டும்” என்று ரவிக்குமார் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது - கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது.

மக்கள் விரோத பா.ஜ.க ஒன்றிய ஆட்சிக்கு முடிவுகட்டும் பணியை  'இந்தியா' கூட்டணியும், தமிழ்நாட்டில் செயல்படும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் வெற்றிகரமாக முடித்துக்‌ காட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.



இது பா.ஜ.க-வுக்கு பேரிழப்பு - பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்:  “அ.தி.மு.க கூட்டணி விலகல் என்பது அவர்களின் முடிவு. அது பற்றி பேச முடியாது. ஆனால், இது பா.ஜ.க-வுக்கு பேரிழப்பு. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல முக்கிய கட்சிகள், அவர்களின் முதல் கூட்டத்திற்கு பின் வரிசையாக விலகுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment